பீஜிங்: சீன அதிகாரிகள் வழங்கிய நினைவுப் பரிசுகள் மற்றும் மின்னணு சாதனங்களை அமெரிக்க அதிகாரிகள் குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவருடன் அமெரிக்க அரசு அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயணத்தின் போது, சீன அதிகாரிகள் அமெரிக்க குழுவினருக்கு பல்வேறு நினைவுப் பரிசுகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த பொருட்களை அமெரிக்க அதிபரின் பிரத்யேக விமானத்திற்குள் கொண்டு வரக் கூடாது என பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சீன அதிகாரிகள் வழங்கிய பரிசுப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் அமெரிக்க அதிகாரிகள் வீசியதாக கூறப்படுகிறது.
இந்த நடைமுறை புதிதல்ல என்றும், சீனாவிற்கு வரும் அமெரிக்க குழுக்கள் பல ஆண்டுகளாக இதையே பின்பற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா தனது ரகசிய கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாக கருதப்படுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்க்கும் நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவின் உளவு நடவடிக்கைகளுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
