அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு திமுக ஆதரவா? ஸ்டாலின் பதில்
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலினிடம், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தவெக ஆட்சி குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.
தவெக ஆட்சி குறித்து விமர்சனம்
தவெக ஆட்சி அமைய வேண்டும் என விரும்பிய மக்களே, தற்போது இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்ற மனநிலையில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்தார்.
விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து குற்றச்சாட்டு
சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
திரைப்பட நாயகனைப் போல ஆட்சி செய்வார் என நம்பி வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தவெக ஆட்சிக்கு மதிப்பெண் பூஜ்ஜியம்
தவெக ஆட்சியின் ஐந்து மாத கால செயல்பாடுகளுக்கு முன்னாள் முதல்வர் என்ற முறையில் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்குவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் அலுவலகப் பணிகள் குறித்தும் விமர்சனம் முன்வைத்த அவர், முதல்வர் காலையில் அலுவலகத்திற்கு வந்து மாலையில் வீடு திரும்புவதாகக் குறிப்பிட்டார்.
கைது நடவடிக்கைகளைச் சட்டப்படி எதிர்கொள்வோம்
திமுகவினர் மீதான கைது நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார். நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிப்போம் என்றும் கூறினார்.
மேலும், திமுக நெருக்கடி நிலையையும் மிசா சட்டத்தையும் எதிர்கொண்ட இயக்கம் என்றும், தற்போதைய நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் எதிர்கொள்வோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
