சிட்னி: பிரதமர் Narendra Modi விரைவில் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், அவரை மீண்டும் வரவேற்கும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பார்லிமென்டில் பேசிய அவர், “பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்தன. தற்போது பிரதமர் மோடியை மீண்டும் ஆஸ்திரேலியாவில் வரவேற்கும் வாய்ப்பு கிடைக்க இருப்பது பெருமையாக உள்ளது” என்று கூறினார்.
மேலும், இந்திய – ஆஸ்திரேலிய சமூகத்தினரால் மோடியின் பயணம் சிறப்பாக அமையும் என்றும், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார உறவு மேம்பட்டுள்ளதாகவும், கல்வி மற்றும் கலாசார துறைகளிலும் இந்தியா – ஆஸ்திரேலியா இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அல்பானீஸ் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்த அறிவிப்பை ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
