சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையும் பொருட்படுத்தாமல், 10 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சட்டம் – ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற உடனேயே கையெழுத்திட்ட மூன்று முக்கிய திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை கூட இதுவரை தொடங்கி வைக்க முடியவில்லை. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பை அரசு எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது.
புதிய டிஜிபி நியமனத்திற்குப் பிறகே இந்த திட்டம் தொடங்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால், தமிழகத்தில் தற்போதைய நிர்வாக நிலை குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மே 27ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வரின் டெல்லி பயணம் காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
