கோழிக்கோடு: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாக சிறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம், மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.34 கோடி இழப்பீட்டு தொகை மற்றும் தண்டனை காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 2006ஆம் ஆண்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் ரூ.34 கோடி இழப்பீடு வழங்கப்பட்டால் மன்னிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கேரளம் முழுவதும் நிதி திரட்டும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பின் மூலம் தேவையான ரூ.34 கோடி தொகை திரட்டப்பட்டது. அந்த தொகை வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியதால் அப்துல் ரஹீமின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும், பணியில் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக கருதப்பட்டதால் விதிக்கப்பட்ட 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.
அந்த தண்டனை காலம் மே 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அப்துல் ரஹீம் சவுதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு தொழிலதிபர் பாபி செம்மனூர் உள்ளிட்டோர் மற்றும் உறவினர்கள் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து நேராக வீட்டிற்கு சென்ற அப்துல் ரஹீம், இரண்டு தசாப்தங்களாக காத்திருந்த தனது வயதான தாயை கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
