பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டு, அவரது தலைமையிலான அமைச்சரவையை உடனடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள மக்கள் பவனில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை சித்தராமையா இடைக்கால முதல்வராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மேலிட ஆலோசனையைத் தொடர்ந்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பொறுப்பேற்கும் வகையில் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தற்போதைய அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தபோது, முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்ட சமரச முயற்சியின் அடிப்படையில், இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிக்கும் சுழற்சி முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்றார்.
இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், டி.கே. சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலான அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
அதன் பின்னர், கட்சியின் முடிவை ஏற்று சித்தராமையா பதவியிலிருந்து விலகியுள்ளார்.
2008 முதல் 2013 வரை ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, 2023 முதல் 2026 வரை இரண்டாவது முறையாகவும் கர்நாடகத்தை வழிநடத்தினார். மொத்தம் எட்டு ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த தலைவராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
