சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என்று மேற்காசிய போர் நிலவரத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட மத்திய அமைச்சகங்களின் சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி தவிர பல மார்க்கங்கள் வழியாக இந்தியாவிற்கு எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. முன்பை விட கூடுதலாகவே பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன என்றும் அந்த குழு விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 12 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் முக்கிய வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத் தொடரில் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து விநியோகத் தொடர் பாதிக்கப்படாமல் இருக்க அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
மேலும் நிலைமையை கண்காணித்து தீர்வு காணும் வகையில் எண்ணெய், வெளியுறவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகங்களின் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
நான்கு அமைச்சகங்கள் இணைந்து செயல்படும் இந்த குழு சமையல் எரிவாயு விநியோகம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறையின் இணை செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது:
எல்.என்.ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றிய இரண்டு சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமோ என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. கச்சா எண்ணெய் விநியோகமும் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட அதிக அளவில் பெட்ரோலியப் பொருட்கள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியே மட்டுமின்றி பல்வேறு மார்க்கங்கள் வழியாகவும் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் இந்தியாவிற்கு வருகின்றன.
வழக்கமாக ஹார்முஸ் வழியாக 55 சதவீத கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்தாலும், போர் பதற்றத்திற்கு பிறகு மாற்று மார்க்கங்கள் வழியாக 75 சதவீத அளவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நடைபெற்று வருகிறது.
வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் காத்திருப்பு காலம் வழக்கம்போல இரண்டரை நாட்களாகவே உள்ளது. எனவே நுகர்வோர் அவசரமாக முன்பதிவு செய்ய தேவையில்லை.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 100 சதவீதத்தை விட கூடுதலாக உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒரு நாளுக்கான எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் ஆகும். இதில் 97.5 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள தேவைக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.
தவிர்க்க முடியாத காரணங்களால் 47.4 மில்லியன் மெட்ரிக் தர கியூபிக் மீட்டர் எரிவாயு விநியோகத்தில் தற்காலிக தடை ஏற்பட்டது. ஆனால் மாற்று பாதைகளில் கொள்முதல் தொடங்கியதால் அது விரைவில் சரியாகும். இந்தியாவின் தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலம் கிடைக்கிறது.
மேலும் உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தி 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னுரிமையை வீட்டு நுகர்வோருக்கு வழங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் விநியோக நிலை குறித்து பொதுமக்களுக்கு முறையான தகவல்கள் வழங்க மாநில அரசுகள் செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரில் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
