ஆமதாபாத்: தடை செய்யப்பட்ட ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை குஜராத்தில் விரிவுபடுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெயிஷ்-இ-முகமது அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த அமைப்பின் கொள்கைகளை உருது மொழியிலிருந்து குஜராத்தி மொழிக்கு மொழிபெயர்த்து பரப்பியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.3 லட்சம் நிதி பெற்றதுடன், அதில் ஒரு பகுதியை பயன்படுத்தி பழைய கார் ஒன்றையும் வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் இருப்பிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 254 டிஜிட்டல் ஆவணங்கள், ஜிகாதி தொடர்பான புத்தகங்கள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், ஜெயிஷ்-இ-முகமது அமைப்பின் கொடிகள், மொபைல் போன்கள் மற்றும் மசூத் அசாரின் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அமைப்பில் சேர அனுமதி கோரும் கடிதங்கள் மற்றும் உருது, குஜராத்தி மொழிகளில் எழுதப்பட்ட கொள்கை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
