புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஒரே மருந்தின் விலையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் குறித்து அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் லிஸ் என்ற இளம்பெண் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், தனது உறவினர் ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் பயன்படுத்தும் ரெவிலிமிட் (Revlimid) மருந்தின் விலை அமெரிக்காவில் சுமார் 900 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 ஆயிரம்) எனவும் தெரிவித்துள்ளார்.
அதே மருந்து இந்தியாவில் ரூ.35 முதல் ரூ.300 வரை கிடைப்பதாக கூறிய அவர், இந்தியாவில் பல மருந்துகள் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், இதன் மூலம் அரசு மலிவு விலையில் சுகாதார வசதியை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவில் அதே மருந்துகளுக்கு மிக அதிக விலை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், அங்கு நோயாளிகள் அதிக பொருளாதார சுமையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இதுவரை சுமார் 7.72 லட்சம் பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.
