தமிழகத்தில் நீண்டகால அரசியல் போராட்டத்திற்கு பாஜக தயாராக வேண்டும் என்று ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியல் கட்சிகள் பாஜகவை “பேய்” போல சித்தரித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நான் சிறுவனாக இருந்தபோது, குளத்தில் நீந்தச் செல்லாமல் இருக்க என் பாட்டி, ‘அருகில் உள்ள மரத்தில் பேய் இருக்கிறது’ என்று பயமுறுத்துவார். அதுபோல, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தமிழக அரசியல் கட்சிகள் சித்தரித்து வருகின்றன” என்றார்.
மேலும், “மோடி எதிர்ப்பை மட்டுமே திமுக தனது முக்கிய அரசியல் முழக்கமாக வைத்திருந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்திருந்தால், எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதையே செய்திருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
அதிமுகவை “எடப்பாடி திமுக” என்று அழைப்பதே பொருத்தமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு போட்டியாக வேறு சக்தி உருவாகக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகள் பாஜகவை எதிரியாக சித்தரிக்கின்றன என்றும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருந்து முன்னேற்றம் கண்டுவருவதாக கூறிய அவர், தமிழகத்தை மட்டும் “வித்தியாசமான மாநிலம்” எனச் சித்தரிப்பதை விமர்சித்தார்.
மேலும், “தமிழகத்தில் பாஜகவை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒடுக்க விரும்பும் திமுக மற்றும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது ஆச்சரியமாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
இனி பாஜக நீண்டகால அரசியல் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும், அதற்காக இளமையான மற்றும் பேரார்வம் கொண்ட தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அடிமட்டத்திலிருந்து கட்சியை கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மற்ற கட்சிகளின் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“தமிழகம் வித்தியாசமானது” என்று கூறும் எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி வைக்கக்கூடாது என்றும், இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரிக்க முயலும் பிரிவினைவாத சிந்தனைகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை குறித்து பேசிய அவர், “அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவருக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்பட்டது. அவர் உண்மையான அரசியல் இயக்கத்தை உருவாக்க முயன்றார்” என்று பாராட்டினார்.
இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர அவர் தீவிரமாக முயன்றதாகவும், அந்த பணியில் தானும் இணைந்திருப்பேன் என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
ஆனால், தற்போது தொழில்நுட்ப துறையில் முழுமையாக ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்த அவர், “இந்தியாவுக்கு ஆழமான தொழில்நுட்ப வளர்ச்சி தேவை. எனவே இந்த ஜென்மத்தில் அரசியல் எனக்கு இல்லை” என்றும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், தனது அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பேன் என்றும், அது தனது பேச்சுரிமை என்றும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
