சுவேந்து அதிகாரியின் முதல் அதிரடி: 45க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரி, பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் 45க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது “அனைவருக்குமான முதல்வராக செயல்படுவேன்” என்று தெரிவித்திருந்த அவர், முதல் நாளிலேயே நிர்வாக ரீதியான முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கூறப்படும் 45க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பதிவாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா, முதல்வர் சுவேந்து அதிகாரியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக இருந்த சாந்தனுபாலா, முதல்வரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முந்தைய அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய பல்வேறு அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனது தனி உதவியாளர் சந்திரநாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் முதல்வர் சுவேந்து அதிகாரி தீவிர கவனம் செலுத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
