சென்னை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.10,000 கோடி மதிப்பிலான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய மனுவுக்கு, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தானம் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் இருந்ததாக வருவாய் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்து போலி ஆவணங்களின் மூலம் கோவில் நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது கோவிலுக்கு சொந்தமாக 157 ஏக்கர் நிலங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில கோவில்களின் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரராகவ கோவிலுக்குச் சொந்தமான 5.50 ஏக்கர் நிலங்கள், நாட்டரசன்பட்டு ஸ்ரீ ஆலவட்டம்மன் கோவிலுக்குச் சொந்தமான 13.52 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் நாட்டரசன்பட்டு கற்பக விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 82 சென்ட் நிலங்கள் மற்றும் குன்றத்தூர் காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் நிலங்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவில் நில ஆவணங்களில் திருத்தம் செய்து வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் தவறிழைத்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. சுரேந்தர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏழுமலை, கோவில் நிலங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் துணைபோனதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஹிந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
