புதுடில்லி: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் குறித்து, எந்த மாநிலத்திற்கும் அநீதி ஏற்படாது என பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் உறுதி அளித்தார்.
பார்லிமென்டின் சிறப்பு கூட்டத் தொடரில், மொத்த லோக்சபா தொகுதிகளை 543 லிருந்து 850 வரை உயர்த்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மகளிர் 33% இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மெஹ்வால் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், இவை அரசியலமைப்புக்கு எதிரானவை என குற்றம்சாட்டினார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன் இம்மசோதா ஏன் அவசரமாக கொண்டு வரப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, மூன்று மசோதாக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என கூறி, அவற்றை தனித்தனியாக தாக்கல் செய்யாதது குறித்து விமர்சித்தார். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் தி.மு.க. எம்.பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவாதத்திற்குப் பிறகு நடந்த ஓட்டெடுப்பில், 251 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 185 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்ததால், மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், லோக்சபா இடங்களை 850 ஆக உயர்த்தும் எண்ணிக்கை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
பா.ஜ. எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தென் மாநிலங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், அரசியலமைப்பின் அடிப்படையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் இடஒதுக்கீடு என்பது ‘பிச்சை’ அல்ல, பெண்களின் உரிமை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தொகுதி மறுவரையறை மூலம் எந்த மாநிலத்திற்கும் அநீதி ஏற்படாது என்றும், தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் அப்படியே தொடரும் என்றும் உறுதி அளித்தார். இந்த மசோதாக்களை அரசியல் நோக்கில் பார்க்காமல், அதன் நோக்கத்தை புரிந்து ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
