சிறுநீரக முறைகேடு விசாரணை தீவிரம்; அரசு அதிரடி உத்தரவு
சென்னை: சிறுநீரக மாற்று மற்றும் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக எழுந்த புகார்களை தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகள், தானம் பெறுவதற்காக முன்பே பதிவு செய்தவர்களுக்கு உரிய வரிசைப்படி வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு மாநில உறுப்பு மாற்று ஆணையத்திடம் உள்ளது.
அதே நேரத்தில், உயிருடன் இருக்கும் நபர்கள் தங்களின் ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை தானமாக வழங்கும் நடைமுறைகளில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் மற்றும் தனியார் மருத்துவத் துறையை சேர்ந்த சிலர், வறுமையில் உள்ளவர்களை உறுப்பு தானம் செய்ய மன அழுத்தம் கொடுத்து சம்மதிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், உறுப்பு தானம் வழங்குபவர்களை நோயாளியின் ரத்த உறவினராக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற சம்பவம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், மகாராஷ்டிரா மாநில விவசாயிகளிடம் இருந்து சிறுநீரக தானம் பெறுவதில் தமிழகத்தை சேர்ந்த சில டாக்டர்கள் மற்றும் இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த விசாரணை சில காலமாக மந்தமாக இருந்த நிலையில், தற்போது அதை மீண்டும் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் சில உறுப்பு மாற்று முறைகேடு புகார்களும் கிடைத்துள்ளன. அவை உறுதி செய்யப்பட்டால், தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்” என்றனர்.
மேலும், “விசாரணையை விரைவுபடுத்த அரசு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
