புதுடில்லி: கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் வாங்க மொத்தம் ₹5,083 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய சில ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடலோர காவல்படைக்காக ‘ஏ.எல்.எச் மார்க்–2’ வகையைச் சேர்ந்த நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஆறு இரட்டை இன்ஜின் கொண்ட நவீன ஹெலிகாப்டர்கள் ₹2,901 கோடி மதிப்பில் HAL நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட உள்ளன. தற்போது பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களை விட இவை மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படும்.
மேலும், போர்க்கப்பல்களில் இருந்து வானில் பறக்கும் எதிரி ஏவுகணைகளை தாக்கும் திறன் கொண்ட ‘ஷ்டில்’ ஏவுகணைகளையும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளை ₹2,182 கோடி மதிப்பில் ரஷ்யாவின் ‘ஜே.எஸ்.சி ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்’ நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும். அதேபோல் ‘ஷ்டில்’ ஏவுகணைகள் வான்வழி அச்சுறுத்தல்களை சமாளித்து கடற்படையின் வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
