வாஷிங்டன்: ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களால் மேற்காசிய பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களால் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. இதனால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போர் சூழ்நிலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஈரான் தாக்குதலில் பலத்த காயமடைந்திருந்த இரு அமெரிக்க வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
