சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாகக் குறைக்க முடியாத நிலை இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் Hardeep Singh Puri தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் காரணமாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அதன் பலன் உடனடியாக உள்நாட்டு சந்தையில் பிரதிபலிக்கவில்லை என்றார்.
மேலும், ஜூன் 30 வரை பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவை அடக்க விலையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தமாக ₹74,781 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்த நிலையிலேயே இருந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் முதல் ஜூன் வரை நாட்டின் எந்தப் பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், அதிக தேவை இருந்தபோதிலும் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், 2022 முதல் 2026 வரை சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை 5.58% மற்றும் டீசல் விலை 6.23% உயர்ந்திருந்தாலும், அந்த சுமையை நுகர்வோரிடம் சுமத்தாமல் இந்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
