Narendra Modi தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் பொருளாதார மாநாட்டில், ஹரியானாவின் கார்கோட் பகுதியில் Maruti Suzuki நிறுவனத்தின் 4-வது வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவு பல தசாப்தங்களாக வலுவாக நீடித்து வருவதாக தெரிவித்தார். சில ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வணிக உறவை பேணிவருவதாகவும், புதிய முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சுசூகி தயாரிக்கும் ஒவ்வொரு 3 கார்களில் 2 கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வாகனங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
உலகளவில் நுகர்வு குறைவு, வர்த்தக நிச்சயமற்ற நிலை மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக திகழ்கிறது என்றார். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஜப்பானின் “கைஜென்” (Kaizen) கொள்கையைப் பின்பற்றி தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் “டிஎன்ஏ”வை மாற்றி அமைத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
வரி சீர்திருத்தம், எளிதாக தொழில் தொடங்கும் சூழல், நிர்வாக மாற்றங்கள், தனியார் முதலீட்டிற்கு ஊக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியா ஜப்பான் நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜப்பான் பிரதமருடன் பொருளாதார பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீட்டை 10 டிரில்லியன் யென் அளவுக்கு உயர்த்தவும், ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்
