Chennai Super Kings அணியின் ஆல்ரவுண்டரான Jamie Overton, சென்னை ரசிகர்களின் ஆதரவு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் ஜேமி ஓவர்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக Lucknow Super Giants அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, மொத்தமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அணிக்கு நெருக்கடியான சூழல்களில் ஓவர்டன் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி வருகிறார்.
இதுவரை இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவரது ஆட்டத்தால் கவரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், “ஜேமி ஓவர்டனுக்கு சிலை வைக்க வேண்டும்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவர்டன், “சிஎஸ்கே அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது” என்றார்.
மேலும், “இந்த சீசனில் சரியான லெந்தில் பந்துவீசுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். வேகமாக பந்துவீசுவது நல்ல விஷயம் தான். ஆனால் லைனில் சிறிய தவறு ஏற்பட்டாலும் எதிரணி ரன்கள் எடுத்து விடும்” என்றும் கூறினார்.
ரசிகர்கள் ஆதரவு குறித்து பேசிய அவர், “இங்கிலாந்தில் ரசிகர்கள் எனது பெயரை சிஎஸ்கே ரசிகர்கள் போல கரகோஷமிட்டு முழக்கமிடுவதில்லை. சென்னை ரசிகர்கள் எனக்கு பின்னால் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
அதேபோல், “சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட் குறித்து நன்றாக அறிந்தவர்கள். சேப்பாக்கம் ரசிகர்கள் அற்புதமானவர்கள். திடலில் ரசிகர்கள் நமது பெயரை முழக்கமிடுவது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் ஜேமி ஓவர்டன் தெரிவித்துள்ளார்.
