மோடியின் சிக்கன வேண்டுகோள் எதிரொலி: புல்லட்டில் அலுவலகம் சென்றார் பட்னவிஸ்
மும்பை: பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, பல மாநிலங்களில் சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புல்லட் மோட்டார் சைக்கிளில் முதல்வர் அலுவலகம் சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக பெட்ரோலிய பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னுதாரணமாக தமது பாதுகாப்பு வாகனங்களின் பயன்பாட்டையும் அவர் குறைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து மஹாராஷ்டிரா அரசும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களை ரத்து செய்துள்ள முதல்வர் பட்னவிஸ், அரசு ஊழியர்களுடன் நடைபெறும் கூட்டங்களை இணையவழியில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புதிய வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, மின்சார வாகனங்களை அதிகமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் இருந்து முதல்வர் அலுவலகத்திற்கு தேவேந்திர பட்னவிஸ் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் மாநில அமைச்சர் ஆஷிஷ் ஷேலாரும் பயணம் செய்தார்.
இதற்கிடையில், பட்னவிஸின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அவர் பயணித்த வாகனத்தின் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டதாகவும், விளம்பர நோக்கத்திற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
