பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விவாடெக் (VivaTech) தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் சுமார் பாதி இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்தார். தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாடெக் மாநாடு ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், திறமை, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் அடையாள அமைப்பு, யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்கள், நிதி சேவைகள், கல்வி, டெலிமெடிசின் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். யுபிஐ மூலம் உலகளவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குறிப்பிடத்தக்க பங்கு இந்தியாவுக்கே இருப்பதாகவும், தற்போது பிரான்சின் ஈபிள் கோபுரத்திலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அனைவருக்கும் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) மனித வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கருவியாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியா திறமையான இளைஞர்களையும், திறந்த சமூகத்தையும் கொண்ட நாடாக இருப்பதுடன், உலகின் மிகக் குறைந்த செலவில் டேட்டா சேவைகள் மற்றும் பசுமை ஆற்றல் வசதிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
