இமயமலை தொடரில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்யுமாறு முருக பக்தர்களுக்கு உத்தரகண்ட் அரசு அழைப்பு விடுத்துள்ளது. புராண சிறப்பும், இயற்கை எழிலும் இணைந்த இந்த திருத்தலம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கிரவுஞ்ச மலையின் உச்சியில், சுமார் 12,000 அடி உயரத்தில் கார்த்திக் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களிடையே தனித்துவமான முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
கந்த புராணத்தில் கூறப்படும் கதையின்படி, விநாயகர் மற்றும் முருகன் இடையே முதல் வழிபாட்டு உரிமைக்கான போட்டி நடைபெற்றபோது, உலகை சுற்றி வர சென்ற முருகன் பின்னர் மனவருத்தத்துடன் கிரவுஞ்ச மலையில் தங்கி தவம் செய்ததாக நம்பப்படுகிறது. அங்கு யாகம் வளர்த்து தனது உடலின் சதையையே ஆஹுதியாக வழங்கியதாகவும், பின்னர் சிவபெருமான் காட்சி தந்து அருள்பாலித்ததாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இதன் காரணமாக, இத்தலத்தில் முருகப்பெருமான் எலும்பு வடிவில் வேல் மற்றும் மயிலுடன் காட்சியளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்பாலிக்கும் அரிய தலங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோவில் ருத்ரபிரயாக் – போகாரி சாலையில் உள்ள கணக்சவுரி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் பயணித்து கோவிலை அடையலாம்.
கோவிலின் உச்சியிலிருந்து கைலாய மலைத் தொடர்களின் அழகிய பனிச்சிகரங்களான கேதார்நாத், நீலகண்ட், கங்கோத்ரி, சுமேரு பிரபாத் உள்ளிட்ட பல்வேறு மலைகளை காண முடியும். இதனால் இந்த பகுதி ஆன்மிக சுற்றுலாவுடன் இயற்கை சுற்றுலாவிற்கும் முக்கிய இடமாக திகழ்கிறது.
கார்த்திக் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகள் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையிலான ஆன்மிக உறவை மேலும் வலுப்படுத்தும் என உத்தரகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
