இறுதிப்போட்டிக்கான டிக்கெட் யாருக்கு? இன்று பெங்களூரு – குஜராத் மோதல்
ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (மே 26) மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் விளையாடும்.
லீக் சுற்று முடிவில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. நெட் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தையும், குஜராத் இரண்டாவது இடத்தையும் பெற்றது.
ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் அதிரடி பேட்டிங் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சால் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோர் பேட்டிங்கில் அணிக்கு பலம் சேர்த்துள்ளனர்.
பந்துவீச்சில் ஜாஷ் ஹேஸில்வுட், புவனேஷ்வர் குமார், ராசிக் சலாம் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடினமான சூழ்நிலைகளிலும் மீண்டு வந்து வெற்றி பெறும் திறனை பெங்களூரு அணி இந்த சீசனில் காட்டியுள்ளது.
மறுபுறம், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி டாப் ஆர்டர் பேட்டிங்கை பெரிதும் நம்பி உள்ளது. கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகின்றனர்.
பந்துவீச்சில் முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் அசத்தி வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் ரஷீத் கான் மற்றும் சாய் கிஷோர் அணிக்கு வலுசேர்க்கின்றனர்.
இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் 8 முறை மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்த சீசனிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
ஆடுகளம் நிலவரம்
தர்மசாலா மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சமமான வாய்ப்பை வழங்கும் ஆடுகளமாக கருதப்படுகிறது. இங்கு நடைபெற்ற இரவு ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
மழையால் போட்டிக்கு பாதிப்பு இருக்காது என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இதே மைதானத்தில் விளையாடிய அனுபவம் பெங்களூரு அணிக்கு சாதகமாக இருக்கலாம்.
