இந்தியா – இத்தாலி உறவு புதிய உயரம்: மோடி – மெலோனி பேச்சில் முக்கிய ஒப்பந்தங்கள்
ஐந்து நாடுகள் கொண்ட அரசு முறைப் பயணத்தின் இறுதி கட்டமாக பிரதமர் Narendra Modi நேற்று முன்தினம் இரவு Italy சென்றார். ரோம் நகரில் அவருக்கு இத்தாலி ராணுவத்தின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இத்தாலி அதிபர் Sergio Mattarellaவை பிரதமர் மோடி சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், முக்கிய தாதுக்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைக்கு முன், இத்தாலி பிரதமர் Giorgia Meloni பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்து உபசரித்தார். பின்னர் இரு தலைவர்களும் ரோமின் வரலாற்றுச் சிறப்புமிக்க Colosseum அரங்கிற்குச் சென்று பார்வையிட்டனர்.
வர்த்தகம், முதலீடு, புதிய தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா – இத்தாலி உறவை “விரிவான சிறப்பு கூட்டாண்மை” என்ற அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான விரிவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன,” என்றார்.
சமீப ஆண்டுகளில் இந்தியா – இத்தாலி உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும், 2029ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 1.90 லட்சம் கோடி ரூபாயாக வர்த்தகத்தை உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி உருவெடுத்துள்ளது.
