சத்தீஸ்கர் மாநில கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும், பள்ளி வழிபாட்டு கூட்டங்களில் தேசிய கீதத்துடன் காயத்ரி மந்திரம் மற்றும் பிற இந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக இடம்பெறச் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, காலை நடைபெறும் பள்ளி வழிபாட்டு கூட்டங்களில் தேசிய கீதம், தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரம் மற்றும் சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு வாசிப்பு ஆகியவை இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மதிய உணவுக்கு முன் மாணவர்கள் அனைவரும் உணவுக்கான பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், பள்ளி முடியும் நேரத்தில் காயத்ரி மந்திரம் மற்றும் சாந்தி மந்திரம் பாடப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை அனைத்து அரசு பள்ளிகளும் கட்டாயமாக பின்பற்றுவதை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனைகளை கட்டாயமாக்குவது சரியல்ல என்றும், இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
