புதுடில்லியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க பரிந்துரை செய்த அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் அறிக்கைக்கு, 275 ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் உலகளாவிய மத சுதந்திர நிலைகளை கண்காணித்து, கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாகும். இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள் நடைபெறுகின்றன என கூறப்பட்டதுடன், ‘ரா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது முன்னாள் உயரதிகாரிகள் கூட்டறிக்கை வெளியிட்டு அதனை விமர்சித்துள்ளனர்.
அந்த அறிக்கையில், அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடு உள்நோக்கம் கொண்டதாகவும், தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இன்றி இந்திய அமைப்புகளை குறிவைத்து சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சமூக மற்றும் கலாசார அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக சேவைக்கும் பங்களித்து வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்தியா–அமெரிக்க உறவுகளில் விரிசல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில மறைமுக சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் எனவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஹேமந்த் குப்தா, முன்னாள் தேர்தல் ஆணையர்கள் ஓ.பி. ராவத், சுனில் அரோரா, முன்னாள் வெளியுறவு செயலர் கன்வல் சிபல் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்
