மத்திய ஆயுதப்படைகளில் உயர்பதவிகளை ஐபிஎஸ் அதிகாரிகளே வகிப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் (ITBP), சஷஸ்டிர சீமா பால் (SSB) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (BSF) போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
இந்த படைகளில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களுக்கு உயர்பதவிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரிகளே தொடர்ந்து உயர் பதவிகளில் நியமிக்கப்படுவதால், களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழலில், உயர்பதவிகளை ஐபிஎஸ் அதிகாரிகளே வகிப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வரைவு மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
புதிய சட்டத்தில், பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பதவி கட்டமைப்புகள் குறித்து முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கூடுதல் இயக்குநர் ஜெனரல், சிறப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் இயக்குநர் ஜெனரல் பதவிகளில் 67 சதவீதம் வரை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
அதேபோல், ஐஜி பதவிகளில் 50 சதவீதம் மற்றும் டிஐஜி பதவிகளில் 20 சதவீதம் வரை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இதே நேரத்தில், டிஐஜி பதவிகளில் இருந்த முழு ஒதுக்கீட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து உயர்பதவிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே வழங்கப்பட்ட நிலையில், தற்போது சதவீத அடிப்படையில் நியமனங்கள் கொண்டு வரப்படுவது களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
