சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னைகள் மற்றும் தலைவர்களிடையேயான ஈகோ காரணமாக கட்சி பலவீனமடைந்து வருவதாக கூறி, முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அறிக்கை மூலம் தனது விலகலை அறிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.
அப்போது, “எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட இந்த இயக்கம் இன்று பலவீனமடைந்து வருவது என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் முக்கிய தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இருக்க வேண்டும். ஆனால் தலைவர்களிடையே நிலவும் ஈகோ, கட்சியின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக உள்ளது” என்றும் கூறினார்.
“கட்சியை வளர்க்கும் எண்ணம் இல்லாவிட்டால், அதிமுகவை அரசியலில் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்” என்று எச்சரித்தார்.
ஜெயலலிதா கூறிய “எனக்குப் பின்னாலும் கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும்” என்ற வார்த்தைகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உணர வேண்டும் என்றும் செம்மலை தெரிவித்தார்.
“இந்த இயக்கத்தில் ஒருமித்த கருத்தும், ஆரோக்கியமான கலந்துரையாடலும் இல்லாததே மிகப்பெரிய குறை. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எப்படி கட்சியை காப்பாற்றினர் என்பதை தற்போதைய தலைவர்கள் சிந்திக்க வேண்டும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர், “அதிமுக தொடங்கிய காலம் முதல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணித்தவன் நான். இன்று கனத்த இதயத்துடன் கட்சியிலும், பொறுப்பிலும் இருந்து விலகுகிறேன். அந்த இரு மாபெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது” என்றார்.
மேலும், “என்னுடைய விலகலுக்குப் பிறகாவது கட்சியை கட்டிக்காக்க வேண்டும். அதிமுக தமிழக அரசியலில் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் தமிழகத்திற்கு நல்லது” என்றும் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர்கள் தங்களின் ஈகோவை மறந்து, குறைகளை சரிசெய்து கட்சியை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், “அதிமுக பிளவுக்கு பின்னால் பாஜ உள்ளது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. கூட்டணிக் கட்சியுடன் ஆலோசனை நடத்துவதில் தவறு இல்லை” என்றும் கூறினார்.
விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாக கருதவில்லை என்ற கருத்து குறித்து பேசிய அவர், “அந்த அளவுக்கு கட்சியை வலுவாக வைத்திருக்க நாம் தவறிவிட்டோமா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்.
வேறு எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும் செம்மலை தெளிவுபடுத்தினார்.
செம்மலை 1980-ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றவர். பின்னர் 1984, 2001 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபை உறுப்பினராகவும், 2009-ம் ஆண்டு சேலம் மக்களவை தொகுதியில் எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
