இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுவேகத்தில் நடக்கின்றன: பிரதமர் மோடி
கோதன்பெர்க்: இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், சுத்தமான எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய ஸ்வீடன் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐந்து நாடுகள் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்குப் பிறகு ஸ்வீடன் சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமரின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக அவர் ஸ்வீடன் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பயணித்த விமானம் ஸ்வீடன் வான்வெளிக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கின. விமான நிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் நேரில் வந்து மோடியை வரவேற்றார். அரசு முறைப்படி சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஸ்வீடனில் வசிக்கும் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தியதற்காகவும், தலைமைத்துவ பண்புகளை பாராட்டியும், ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் – கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இளவரசி விக்டோரியா வழங்கி கவுரவித்தார். இது பிரதமர் மோடிக்கு கிடைத்த 31-வது சர்வதேச விருதாகும்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயிரியல் அறிவியல் துறைகளில் இந்தியா – ஸ்வீடன் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. அரசின் உறுதியான முடிவுகள் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவு ரயிலைப் போல முன்னேறி வருகின்றன” என்றும் கூறினார்.
“ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய அம்சங்கள் இந்தியா மற்றும் ஸ்வீடனை இணைக்கின்றன. ஸ்வீடனின் புதுமை திறனை இந்தியாவின் வளர்ச்சி வேகத்துடன் இணைக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவில் வடிவமைத்து, இந்தியாவில் தயாரித்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுங்கள்” என்ற கொள்கையை முன்வைத்து, ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவை நம்பகமான பொருளாதார சக்தியாக ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர்லையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
