மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மகளுக்கு விவாகரத்து கிடைத்ததை ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மேளதாளத்துடன் கொண்டாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மீரட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் ஷர்மா அவர்களின் மகள் பிரணிதா வசிஷ்டா. இவர் மனோதத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்; தற்போது மீரட் ஜூடிசியல் அகாடமியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
2018 டிசம்பர் 19ஆம் தேதி ராணுவ அதிகாரியுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில நாட்களிலேயே தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி, பிரணிதா மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தாலும், பிரச்சினைகள் தொடர்ந்தன.
இதனால், பிரணிதா மீரட் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மகளை, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களிடம் கவனத்தை ஈர்த்தது.
இது குறித்து ஞானேந்திர குமார் ஷர்மா கூறுகையில், “திருமண வாழ்வில் மகள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணர்ந்தேன். சமூக எதிர்பார்ப்பை விட, மகளின் மகிழ்ச்சியும் கண்ணியமும் முக்கியம்,” என்றார்.
பிரணிதா கூறுகையில், “திருமண வாழ்வில் மனதளவில் பாதிக்கப்பட்டேன். என் வாழ்க்கையை மீண்டும் தொடங்க குடும்பம் அளித்த ஆதரவுக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
