மூணாறு: மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் திட்டங்களை பெற கேரள அரசு தயாராக இல்லை என தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் பா.ஜ. கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக மூணாறில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசினார்.
அப்போது, தேவிகுளம் பகுதியில் நிலவும் பட்டா, ஜாதி சான்றிதழ், மருத்துவ வசதி, தொழிலாளர்களுக்கு வீடு, வனவிலங்கு பிரச்சினை போன்ற அடிப்படை சிக்கல்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மூணாறில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும், முக்கிய சாலைப்பணிகளுக்கு வனத்துறை அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும், அவர்கள் மத்திய அரசின் திட்டங்களை தடுப்பதே கொள்கையாக கொண்டுள்ளனர் என்றும் விமர்சித்தார்.
மேலும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கியும், கேரள அரசு அதை பயன்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 8,000 கோடி ரூபாயும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
அதேபோல், மத்திய அரசு சார்பில் கட்டப்பட்ட வீடுகளையும் ‘லைஃப் மிஷன்’ என பெயர் மாற்றி குளறுபடி செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
