சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக வழக்கு விசாரிக்கப்பட்டது. பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிக விரைவாக நீதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
