சென்னை: தவெக தலைவர் நடிகர் Vijay பிரசாரக் கூட்டத்தில் காத்திருந்த பெண்களில் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், சென்னை வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு மதியம் முதல் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பாக பெண்கள் அதிக நேரம் வெயிலில் காத்திருந்ததால் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடும் வெயிலும் கூட்ட நெரிசலும் காரணமாக சிலர் திடீரென மயங்கி விழுந்தனர்.
உடனிருந்த தொண்டர்கள் தண்ணீர் தெளித்து அவர்களை சீர்படுத்த முயன்றனர். பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, மயங்கியவர்களை அங்கிருந்து எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
