“விஜய் அரசுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் அவகாசம் தர வேண்டும்” – துரை வைகோ
பரமக்குடி: “முதல்வர் விஜய்க்கும் புதிய அரசிற்கும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை தவிர்க்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது” என்றார்.
மேலும், “லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எனக்கு நெருக்கமான நண்பர். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும், ‘த.வெ.க அரசுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்” என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து பேசிய அவர், “தமிழகத்திற்கு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த சூழலில் அரசு சிறப்பாக செயல்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
“அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லாவிட்டால் எதிர்க்கட்சி என்ற முறையில் பின்னர் விமர்சிக்கலாம்” என்றும் துரை வைகோ கூறினார்.
திமுக – அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், “திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைத்தால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
மேலும், “இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ம.தி.மு.க தனது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடும். வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட மாட்டோம். இதுகுறித்து பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் குறித்து பேசுகையில், “அவர் தற்போது தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் தான் அமைச்சரவை முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நிர்வாக ரீதியான மாற்றங்கள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.
எனவே, இந்த அரசுக்கு நிச்சயமாக கால அவகாசம் வழங்க வேண்டும். முதல்வர் விஜய்க்கும் புதிய அரசிற்கும் குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் தர வேண்டும்” என்று துரை வைகோ வலியுறுத்தினார்.
