“தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்ததால் ராஜினாமா” – மரகதம் குமரவேல் விளக்கம்
சென்னை: “தொகுதி மக்களின் உணர்வுகளையும், அவர்களின் மனநிலையையும் புரிந்து கொண்டதால் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தோம்” என்று அதிமுகவில் இருந்து விலகி பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி அதிமுகவில் பல்வேறு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்றன.
அப்போது தலைமைக்குழு நிர்வாகிகள் இரண்டு விதமான நிலைப்பாடுகளை எடுத்தனர். ஒன்று திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது. மற்றொன்று, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து ஆளுங்கட்சியுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது” என்றார்.
மேலும், “எங்களுக்கு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பம் இல்லை. இந்த எண்ணம் பல அதிமுக எம்.எல்.ஏக்களின் மனதிலும் இருந்தது.
சிவி சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று முடிவு எடுத்தோம்” என்று தெரிவித்தார்.
“நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை தான் எடுத்தோம். அதற்காக அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் இல்லை” என்றும் அவர் கூறினார்.
ஆனால், “அதன் பின்னர் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் எங்களை குறிவைத்து பல்வேறு விமர்சனங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டன” என்று குற்றம்சாட்டினார்.
“தொகுதியில் எங்களை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் எங்களின் நிலைப்பாடு தெளிவானது. திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது துரோகம் என நாங்கள் கருதினோம்” என்றார்.
கடந்த ஆட்சிக் கால அனுபவங்களை சுட்டிக்காட்டிய அவர், “முந்தைய திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் பல கோரிக்கைகள் வைத்தோம். ஆனால் அதில் 10 சதவீத கோரிக்கைகள் கூட நிறைவேறவில்லை.
இந்த முறையும் எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்ற எண்ணமே எங்களிடம் இருந்தது” என்று தெரிவித்தார்.
“மக்கள் எங்களை மீண்டும் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். இது தனிப்பட்ட சுயநலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்றும் கூறினார்.
மேலும், “சுயமரியாதைக்கும், தொகுதி மக்களின் நலன்களுக்காகவும் தான் இந்த முடிவை எடுத்தோம்” என்று விளக்கமளித்தார்.
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்த பிறகு முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
“முதல்வர் விஜய் பதவியேற்று 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளார். அவர் நல்லாட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றும் மரகதம் குமரவேல் கூறினார்.
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசுகையில், “நாங்கள் வேட்பாளர்களாக நிற்க வேண்டுமா என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று தெரிவி
