தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது அல்லது அதன் பாடலைத் தடுக்க முயற்சிப்பதை குற்றமாகக் கருதி சிறைத் தண்டனை வழங்க வழிவகுக்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவுறுத்தியது. மேலும், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய பாடலான வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமான ஜன கண மன பாடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது அதன் பாடலுக்கு இடையூறு விளைவிப்பது குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதாவை மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.
தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதே இந்த மசோதாவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
