கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் புதிய கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான அறிமுக (Induction) நிகழ்ச்சியின் நிறைவு விழா “ஸ்வாகதம் 2026” என்ற பெயரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் வேந்தரும் (Chancellor), சத்குருவுமான மாதா அமிர்தானந்தமயி தேவி (அம்மா) காணொலி வாயிலாக மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “மாணவர்கள் அனைவரும் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல உற்சாகமாக சிறகடித்துப் பறந்து முன்னேற வேண்டும். அப்போதுதான் வெற்றியின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியும்” என்று ஊக்கமளிக்கும் வகையில் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங்கின் முதல்வர் டாக்டர் எஸ். பகவதி பெருமாள் வரவேற்புரை வழங்கினார். அமிர்தா விஸ்வ வித்யாபீடம் அறங்காவலர் ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி மற்றும் Hex20 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எம்.பி. அரவிந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையில் இருப்பதாகக் குறிப்பிட்ட எம்.பி. அரவிந்த், பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் பாலகிருஷ்ணன் சங்கர், வளாக இயக்குநர் பிரம்மச்சாரி சிதானந்தாமிர்த சைதன்யா ஆகியோரும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
அமிர்தாவின் கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை உறவுகள் துறைத் தலைவர் பிரம்மச்சாரி விஸ்வநாதாமிர்த சைதன்யா, மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், Amrita Centre for International Programs மற்றும் Amrita Live-in-Labs திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர் வி. தனம்மாள் இந்து நன்றியுரை வழங்கினார்.
