மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், நீட் தேர்வு தேவையற்றது என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நீட் தேர்வு கூடுதல் மன அழுத்தத்தையும் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் எந்தவித பயனும் இல்லை என்ற கருத்தை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அறவழியில் நடைபெறும் போராட்டங்களுக்கு அரசு முழுமையான பாதுகாப்பையும் தேவையான அனுமதிகளையும் வழங்கி வருவதாக அவர் கூறினார்.
நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் சட்டநிலைகளை கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும், அவற்றை மீறி தவறான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியதாக திமுக மீது அவர் குற்றஞ்சாட்டினார்.
இறுதியாக, நீட் தேர்வை எதிர்ப்பதில் தங்களது நிலைப்பாடு மாறாதது என்றும், அதற்கான சரியான நேரம் வரும்போது தங்களது குரலை முதன்மையாக பதிவு செய்வோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
