சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவை தனது உறவினர் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டதாக கூறி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி அமைச்சர் ஆதவ் தரப்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி, ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கின் முக்கிய நபரான ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறிய அமைச்சர் ஆதவ், தன் சார்பில் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம் மற்றும் மோகன் பார்த்தசாரதி மூலம் ஸ்டாலினுக்கும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கும் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள ஜான் பிரிட்டோ தனது உறவினர் அல்ல என்றும், இதுகுறித்து தனது உறவினரான மற்றொரு ஜான் பிரிட்டோ ஏற்கனவே ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியிட்ட பதிவுக்கு ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
