சண்டிகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஹரியானா காங்கிரஸ் நிர்வாகியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் சஞ்சீவுக்கு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட நபர், தன்னை ராகுல் காந்தியின் செயலாளர் கனிஷ்க் சிங் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
உத்தரகண்ட் காங்கிரஸ் சார்பில் சண்டிகரில் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான ஹோட்டல் முன்பதிவு மற்றும் ஏற்பாடுகளுக்கு நிதி தேவைப்படுவதாகவும் கூறிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றால் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
இதனை நம்பிய சஞ்சீவ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பவன் சர்மா ஆகியோர் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்தை திரட்டினர். பின்னர், சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் தீபக் என அறிமுகமான நபரிடம் அந்தத் தொகையை ஒப்படைத்தனர். பணத்தை வழங்கும் முன், அந்த நபரின் புகைப்படத்தையும் சஞ்சீவ் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார்.
மறுநாள் மேலும் ரூ.5 லட்சம் கேட்டபோது சஞ்சீவ் மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த நபர் தொடர்பை துண்டித்ததால் சந்தேகமடைந்த அவர், கட்சித் தலைமையிடம் விசாரித்தபோது அத்தகைய பயிற்சி முகாம் எதுவும் திட்டமிடப்படவில்லை என்பது தெரியவந்தது.
ஆரம்பத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாக புகார் அளிக்காத சஞ்சீவ், இதுபோன்ற மோசடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிந்த பின்னர் தற்போது புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
