பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜன்தன் வங்கி கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததன் மூலம் மக்கள் நலத்திட்ட நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடையும் வகையில் இடைத்தரகர் முறை ஒழிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போது அமைதியான சூழல் நிலவி வருவதாகவும் தெரிவித்தார். நக்சலைட் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்ஜிகல் ஸ்டிரைக் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உலக நாடுகள் பல்வேறு சூழ்நிலைகளில் பிரிந்திருந்த போதிலும் இந்தியா தனது தேசிய நலனையே முன்னிறுத்தி செயல்பட்டதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், 2047-ஆம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நாட்டை உலகின் முன்னணி வல்லரசாக மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு என்றும் அவர் கூறினார்
