அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப்-எச்’ லீக் போட்டியில், இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை கேப் வெர்டே அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்து அதிர்ச்சி அளித்தது.
போட்டி தொடங்கிய 21-வது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் கெவின் பினா அசத்தலான ப்ரீ-கிக் மூலம் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். பின்னர் உருகுவே வீரர்கள் பதிலடி கொடுத்து, 44-வது நிமிடத்தில் மேக்ஸி அராயுகோவும், முதல் பாதி கூடுதல் நேரத்தில் அகஸ்டின் கனோபியோவும் கோல் அடித்து முதல் பாதியை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் முடித்தனர்.
இரண்டாவது பாதியில் கேப் வெர்டே அணி தொடர்ந்து போராடிய நிலையில், 61-வது நிமிடத்தில் ஹெலியோ வரேலா கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். அதன் பிறகு இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினாலும் கூடுதல் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்த கேப் வெர்டே, தற்போது உருகுவே அணியையும் சமன் செய்ய வைத்து உலகக்கோப்பையில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது.
