மேற்காசிய போர் உலகை பின்னுக்கு தள்ளும்: பிரதமர் மோடி எச்சரிக்கை
தி ஹேக்: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் மற்றும் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, கடந்த தசாப்தங்களில் உலகம் கண்ட முன்னேற்றங்கள் பின்னோக்கி தள்ளப்படுவதுடன், உலக மக்களின் ஒரு பெரிய பகுதி மீண்டும் வறுமையில் சிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் Narendra Modi தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றியபோது, “முதலில் உலகம் கோவிட் பெருந்தொற்றை சந்தித்தது. அதன் பின்னர் பல போர்கள் உருவாகின. தற்போது எரிபொருள் தட்டுப்பாடு உலக நாடுகளை பாதித்து வருகிறது. இந்த தசாப்தம் உலகிற்கு நெருக்கடிகளின் தசாப்தமாக மாறி வருகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும். இல்லையெனில் கடந்த தசாப்தங்களில் உலக நாடுகள் அடைந்த அனைத்து சாதனைகளும் அழிந்துவிடும். உலக மக்கள் தொகையில் ஒரு பெரிய பகுதி மீண்டும் வறுமை என்ற வலையில் சிக்கக்கூடும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து, “உலகில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், உலக நாடுகள் மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலி அமைப்பை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகின்றன. நம்பகமான மற்றும் வெளிப்படையான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் இந்தியாவும் Netherlands நாட்டும் இணைந்து செயல்பட்டு வருகின்றன” என்றும் தெரிவித்தார்.
மேலும், “இன்று நீங்கள் காட்டிய அன்பும் உற்சாகமும், நான் நெதர்லாந்தில் இருப்பதை மறக்க வைத்துவிட்டது. இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் நடைபெறும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
