“மத நடைமுறைகளை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தினால் மதத்தின் நிலை என்ன?” – சுப்ரீம் கோர்ட் கேள்வி
Sabarimala Temple Entry Case தொடர்பான விசாரணையில், மத நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள Sabarimala Sree Ayyappa Temple கோவிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி வழங்கி, 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களின் அடிப்படையில், மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் போது பெண்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் பராசத், “2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கலப்பு திருமணங்களுக்கு ஆதரவாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி Surya Kant, “இதுபோன்ற கணக்கெடுப்புகள் சிக்கலானவை. அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். கல்விசார் ஆய்வு என்ற பெயரில் சில குறிப்பிட்ட நோக்கங்களுடன் அவை தயாரிக்கப்படுகின்றன. அதனால் இத்தகைய ஆதாரங்களை நீதிமன்றம் முன் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
அதேபோல், நீதிபதி B. V. Nagarathna, “ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்ய அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது. அப்படியிருக்கையில், இதற்காக தனியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஷாதன் பராசத், “அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் தொடர்பான பிரிவில், பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான நடைமுறைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அரசு மற்றும் சமூகம் வழங்க வேண்டும் என்பதே அரசியலமைப்பின் நோக்கம்” என்றார்.
பின்னர் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, “தனிநபர் உரிமைகளுக்கும் குழு உரிமைகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து சரியான பாதையை காட்டுவது நீதிமன்றத்தின் கடமை” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், “மக்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக சமூக சீர்திருத்தத்தை கோரினால், நீதிமன்றம் அதனை பரிசீலிக்க முடியும். ஆனால், ஒரு விஷயம் மக்கள்மீது திணிக்கப்படும் சூழலில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, “அரசு சமூகநல சட்டம் கொண்டு வந்தால், அது மத நடைமுறைகளில் தலையீடு என்ற காரணத்தால் ரத்து செய்யப்படக்கூடாது. மாதவிடாயை சமூகம் இன்னும் தடையாகவே பார்க்கிறது. அதுவே பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடையாக உள்ளது” என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, “நீங்கள் அதை தடையாக பார்க்கிறீர்களானால் அது தடை. இல்லையெனில் அது தடை அல்ல. இது ஒரு பக்தர் அதை எப்படி பார்க்கிறார் என்பதையே பொறுத்தது. பக்தர் அல்லாதவரின் பார்வை முக்கியமல்ல” என்று குறிப்பிட்டார்.
மேலும், “ஒவ்வொரு மத நடைமுறையையும் அரசியல் சாசன நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தத் தொடங்கினால், இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மதத்தின் நிலை என்னவாகும்? இதுபோன்ற நூற்றுக்கணக்கான மனுக்கள் குவியத் தொடங்கும்” என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
