முதல்வர் அலுவலக சமூக வலைதள கணக்கு புதிய உச்சம்; விஜய்க்கு அதிகரிக்கும் ஆதரவு
தமிழக முதல்வராக Vijay பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில், தமிழக முதல்வர் அலுவலக சமூக வலைதள பக்கங்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடும் தளங்களாக மட்டுமே இருந்து வந்தன. முதல்வரின் சுற்றுப்பயணங்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமே அதில் இடம்பெற்றன.
அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தகவல் தேவைக்காக அந்தப் பக்கங்களை பயன்படுத்தி வந்த நிலையில், இளைஞர்களின் ஈர்ப்பு மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சமூக வலைதள பக்கங்களின் தோற்றமும் தகவல் வழங்கும் முறையும் மாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு சாதாரண செய்தி வடிவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தற்போது இளைஞர்களை கவரும் வகையில் நவீன டிஜிட்டல் கார்டுகள், கிராபிக்ஸ் மற்றும் விளக்கப்படங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விஜய் முதல்வராக பதவியேற்கும் முன்பு 4.47 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்ந்திருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், முகநூல் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
