மத்தியில் இன்னும் 20 ஆண்டுகள் பாஜ ஆட்சி நீடிக்க வாய்ப்பு: ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர்
புதுடில்லி: பாஜ அரசின் செயல்திறன் மோசமடையாத வரை மத்தியில் அக்கட்சியின் ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
பல தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்த நிறுவனமாக ஆக்சிஸ் மை இந்தியா அறியப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலிலும், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அந்த நிறுவனம் கணித்திருந்தது.
இந்த நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குப்தா அளித்த பேட்டியில், “மத்தியில் 2014ஆம் ஆண்டு தொடங்கிய பாஜ ஆட்சி குறைந்தது 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. பாஜ அரசின் செயல்திறன் குறையாத வரை அதன் அரசியல் நிலை பாதுகாப்பாக இருக்கும்” என்றார்.
மேலும், “1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்தது. பின்னர் பல்வேறு சிரமங்களை சந்திக்க தொடங்கியது. இந்திய அரசியலில் ஒரு தலைமுறை சுழற்சி சுமார் 20 ஆண்டுகள் நீடிக்கும் என்ற கருத்து முன்பே இருந்து வருகிறது. அந்த சுழற்சி தற்போதும் தொடரும்” என்றும் கூறினார்.
இதன் மூலம் பாஜ நீண்ட காலத்திற்கு இந்திய அரசியலின் மைய சக்தியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களிடம் இருந்து மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ள பாஜ மீது எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. எனவே பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்” என்றும் தெரிவித்தார்.
அவர்களின் செயல்பாடு பலவீனமாகவோ அல்லது மோசமாகவோ மாறாத வரை பாஜ தொடர்ந்து வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் பிரதீப் குப்தா கூறினார்.
மேலும், “கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், மீண்டும் மக்களின் ஆதரவை பெற குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் ஆகலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
