புதுடில்லி: வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட ‘காக்ரோச் ஜண்டா பார்ட்டி’ என்ற நையாண்டி அரசியல் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலையில்லா இளைஞர்கள் நாட்டின் “கரப்பான் பூச்சி” மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணி” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்ததாக கூறப்பட்ட கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பல இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி அபிஜீத் டிப்கே என்பவர் ‘காக்ரோச் ஜண்டா பார்ட்டி’ என்ற நையாண்டி அரசியல் இயக்கத்தை சமூக வலைதளங்களில் தொடங்கினார்.
இந்த இயக்கத்திற்கு இளைஞர்களிடையே குறுகிய காலத்திலேயே அதிக வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்தது.
இந்நிலையில், சுமார் ஒன்றரை கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த அந்த சமூக வலைதள பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், “Cockroach Is Back” என்ற புதிய சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கத்தை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.
