புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைவாக அமல்படுத்தும் நோக்கில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 543 இலிருந்து 816 ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, வரும் 16ஆம் தேதி பார்லிமென்ட் மீண்டும் கூட உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், இந்த மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. இதில் அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அங்கீகரிக்கும் மசோதா மற்றும் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டம் 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே அது அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 2027ஆம் ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2029 லோக்சபா தேர்தலுக்குள் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை முன்னிட்டு, மத்திய அரசு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு இந்த சட்டத்தை விரைவாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை 543 இலிருந்து 816 ஆக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இந்த மாற்றங்களை கொண்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகவே பார்லிமென்ட் மீண்டும் கூட்டப்பட உள்ளது.
இந்த கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ராஜ்யசபாவில், “அரசிடம் சில முக்கிய மசோதாக்கள் உள்ளன. அடுத்த 2-3 வாரங்களில் முக்கியமான மசோதா கொண்டு வரப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், “சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நேரத்தில் இந்த மசோதாவை கொண்டு வருவது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக தெரிகிறது” என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, “பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அரசின் கடமை. இதற்கு தேர்தல்களுடன் எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்; ஆனால் மசோதா கொண்டு வரப்படும் நேரம் மற்றும் முறையில் அரசு விளையாடக்கூடாது” என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நட்டா, “ஒரு சட்டத்தை எப்போது கொண்டு வர வேண்டும் என்பதை தீர்மானிக்க அரசுக்கு உரிமை உண்டு” என தெரிவித்தார்.
