சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள பிரீமியர் லீக் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மற்றும் வரும் 11ஆம் தேதி, சி.எஸ்.கே அணி பங்கேற்கும் இரண்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளை தேர்தல் முடிந்த பின் நடத்தும்படி, பிரீமியர் லீக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திருவல்லிக்கேணியை சேர்ந்த டி. பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்? நீங்கள் போட்டியை பார்க்க விரும்பவில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். போட்டிகள் நடத்தப்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்னை?” என கேள்வி எழுப்பினர்.
