போலி கல்வி சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த உத்தரவு
சென்னை: சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத கல்வி தொடர்பான தகவல்கள் பரவுவதால், போலி கல்வி சமூக வலைதளங்களை கண்காணித்து மாணவர்களை தவறான தகவல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி, தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல போலி சமூக வலைதள கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. கல்வித்துறையின் பெயர் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி இயங்கும் இந்த தளங்கள், மாணவர்களை தவறாக வழிநடத்துவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக “எளிதான தேர்வு வினாக்கள்”, “தேர்வில் வரும் கேள்விகள்” போன்ற பெயர்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனால் மாணவர்களின் சிந்தனை திறன் பாதிக்கப்படுவதுடன், கல்வி தொடர்பான குழப்பங்களும் அதிகரிக்கின்றன.
மேலும், “கல்வி ஆலோசகர்” என்ற பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச் சென்று பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் டெலிகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பல குழுக்கள் இயங்குவதாகவும், அவற்றை கல்வித்துறை முறையாக கண்காணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி தகவல்கள் காரணமாக வினாத்தாள் கசிவு உள்ளிட்ட வதந்திகள் பரவி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பதற்றமும் பீதியும் உருவாகி வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
இதனால், கல்வித்துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து, போலி கணக்குகள் மற்றும் தவறான தகவல்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வதந்திகள் பரவத் தொடங்கிய உடனேயே சரியான தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
